Showing posts with label சிவகங்கை. Show all posts
Showing posts with label சிவகங்கை. Show all posts

Thursday, 26 November 2015

அரசு மேனிலைப் பள்ளி, பீர்க்கலைக்காடு, சிவகங்கை மாவட்டம்

நமது அமைப்பின் சார்பாக 26-11-2015 அன்று அரசினர் மேனிலைப் பள்ளி, பீர்க்கலைக்காடு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. 6-ம் வகுப்பில் 44 மாணவர்களுக்கும் 7-ம் வகுப்பில் 43 மாணவர்களுக்கும் 8-ம் வகுப்பில் 50 மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.  பொறியாளர். திரு.ராமமூர்த்தி, காரைக்குடி அவர்களின் சார்பாக அவரின் நண்பரும், நமது அமைப்பின் செயல்பாடுகளில் தம்மை முழுமனதோடு இணைத்துக் கொண்டவரும், இயற்கை விவசாயியுமான பொறியாளர். திரு. முருகேஷ் அவர்கள் புத்தகங்களை வழங்கி சிறப்பித்தார். விழா பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவச் செல்வங்களால் ஒருங்கிணைத்து செம்மையாக நடத்தப்பட்டது.

         

         

சிவகங்கை சீமை நம்மை தொடர்ந்து ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. இப்பள்ளியின் அமைவிடமும் அங்கிருந்த முதிர்ந்த, பெரிய, அடர்ந்த பசுமரங்களும், கிராமத்து வளர்ப்பாகிய நமக்கு, பள்ளியுடனும் அங்கிருந்த குழந்தைகளுடனும் சட்டென ஒரு பிணைப்பை ஏற்படுத்தின. தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்களின் அணுகுமுறையும் பேச்சும் அந்த பிணைப்பை மேலும் வலுப்படுத்தின. 

எதிலும் ஒரு ஒழுங்கு! அகர வரிசைப்படி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்படும் காட்சி

பரந்து விரிந்த பசுமரத்தடிரயில் பள்ளி மாணவர்கள் 

புத்தகமும் புன்னகையும்

 கதை சொல்லியே மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் கணித ஆசிரியர் திரு. சத்தியமூர்த்தி அவர்களாகட்டும், நம் செயல்பாடுகளைப் பற்றி அறிந்தவுடன் “ சார், எனக்கு கொஞ்சம் புக்ஸ் வாங்கித் தர முடியுமா? பெர்சனாலா கொஞ்சம் குழந்தைகளுக்கு குடுக்கலாம்னு இருக்கேன்” என்று உடனடியாக நம் தொலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்ட வேதியியல் ஆசிரியர் திரு. சரவணன் அவர்களாகட்டும், ‘இளையநிலா’ என்னும் காலாண்டிதழை நண்பர்களோடு இணைந்து வெளியிடுபவரும், குழந்தைகளுக்கென பிரத்யேகமாக கவிதை நூலை இயற்றி, கூடிய விரைவில் வெளியிட விருப்பம் தெரிவித்தவருமான, தமிழ் ஆசிரியர் திரு. புகழேந்தி அவர்களாகட்டும், விதை பதிவேடு இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று நமக்கு ஆலோசனை வழங்கிய ஆசிரியைகள் திருமதி. சுமதி, திருமதி. மீனாட்சி ஆகியோராகட்டும் ஒவ்வொருவரும் ஒரு ஆசிரியர் எப்படியெல்லாம் இயங்க முடியும், எவ்வாறெல்லாம் நற்பண்புகளையும் நற்சிந்தனைகளையும் குழந்தைகள் மனதில் விதைக்க முடியும் என்பதை நமக்கு உணர்த்தினர். கணித ஆசிரியர் திரு.சத்தியமூர்த்தி அவர்கள் மாணவர்களுடன் பேசுவதைக் கேட்டால் சிரிக்காதவனும் சிரிப்பான் சிந்திக்க மறந்தவனும் சிந்திப்பான். மகாகவி ‘பாரதி’யில் தொடங்கி கல்வி கண் திறந்த கடவுள், கர்ம வீரர் ‘காமராஜர்’ வரை அவர் கதை சொன்னதும், அதில் நகைச்சுவையையும் நற்சிந்தனையையும் கலந்து சொன்னதும் அதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். புதிய புத்தகங்கள், புதிய சிந்தனைகள், புகைப்படங்கள் மற்றும் புன்னகையுடன் அங்கே விதை விதைக்கப்பட்டது. நன்கொடையாளர், நல்லாசிரியர்கள் மற்றும் நண்பர் திரு.முருகேஷ்-க்கு நமது நன்றிகள். மகிழ்ச்சியோடு நம் பயணம் தொடரும்.



Wednesday, 9 September 2015

கோட்டையூர் , சிவகங்கை மாவட்டம் - 6 ம் வகுப்பு

விதை அமைப்பின்  நூல் வழங்கும் விழா 07.09.15 அன்று ஒருங்கிணைப்பாளர் மரு. பிரகாஷ் அவர்களால்  சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூரில் இருக்கும் சிதம்பரம் செட்டியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 6 ம் வகுப்பு மாணவிகளுக்கு நூல்கள் வழங்கி சிறப்பாக நடத்தப்பட்டது.


சமூக மாற்றத்தை நோக்கிய நமது பயணத்தின் அடுத்த கட்டமாக தென் மாவட்டங்களில் முதல் மாவட்டமாக சிவகங்கை மாவட்டத்தில் விதை-யின் முதல் விதையை விதைக்கும் எண்ணத்தில் நாம் ஒரு பள்ளியை அணுகினோம்.  
       காலை அலுவலகப் பணியை முடித்துவிட்டு களைப்புடன் சென்றிருந்த நமக்கு சுமார் 1.30 மணி நேரம் காத்திருக்க வேண்டிய அருமையான (!) வாய்ப்பு கிடைத்தது. வழக்கம் போல சும்மா இருந்தால் நாம் என்ன செய்வோமோ அதையே நாமும் செய்தோம்? வேடிக்கை பார்த்து கொண்டிருந்தோம்!. பள்ளி அலுவலக அறையின் முகப்பில் பல அளவுகளில் இருந்த கருப்பு வெள்ளை புகைப்படங்களும், சாதனை விளக்கங்களும் பள்ளியின் பாரம்பரியத்தையும், அதன் தொடர்ச்சியான சீரிய செயல்பாட்டையும் பளிச்சென்று கூறின. நெடு நாட்களுக்குப் பின் பள்ளிக்குள் சென்ற நமக்கு, அங்கிருந்த மாணவியரும் ஆசிரியைகளும் நமது பள்ளிபருவ நினைவுகளை மெதுவாக தட்டி எழுப்பினர். நாம் பள்ளியில் படித்த விதங்களையும், விளையாடிய விளையாட்டுகளையும், ஆசிரியர்களிடம் பாராட்டுகள் (!) பெற்றதையும், அடி வாங்கியதையும் நினைத்து கொண்டு நமக்குள் நாமே சிரித்துக் கொண்டோம். பசி அடிவயிற்றை கிள்ளத் தொடங்கும்போது தலைமை ஆசிரியையை (H.M) பார்க்க வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை அல்வா (!) போல் பயன்படுத்திக் கொள்ளும் நாம் நமது நோக்கம் மற்றும் முறைகளைப் பற்றி விளக்கினோம். பொறுமையாக கேட்டுக் கொண்ட H.M. அவர்கள் “ சார்! ரொம்ப சந்தோஷம்
 ! எங்க ஸ்கூல முன்னாடியே ஒரு லைப்ரரி நடத்திட்டு இருக்கோம். பொதுமக்களும் மாணவியரும் தான் புத்தகங்களை வாங்கித்தராங்க. நீங்க புக்ஸ் குடுக்கிறது ரொம்ப சந்தோஷம். அப்போ திங்கட்கிழமை காலைல 8.45-க்கு வந்துடுங்க. ஸ்கூல் அஸெம்பிளிலேய குடுத்திடலாம்” என்றார்கள். முன்பே இரண்டு பள்ளிக்களுக்கு சென்று சற்றே ஏமாற்றத்தில் இருந்த நமக்கு H.M அவர்களின் பதில் வெயிலில் அலைந்தவனுக்கு ஃப்ரிட்ஜ் தண்ணி கிடைத்தது போலிருந்தது. திங்கட்கிழமை கனவுகளுடன் அங்கிருந்து வண்டியை கிளப்பினோம்.
சொன்ன சொல்லை காப்பாற்றும் நோக்கில் திங்களன்று காலை 8.45-க்கு நாம் பள்ளியில் ஆஜரானோம்!. பள்ளியே திருவிழா கலையுடன் இருந்தது. மாணவியரிடம் ஒருவித மகிழ்ச்சியான பரபரப்பும் காணப்பட்டது. H.M. அவர்களை சந்தித்தோம். நாம் மாணவர்களுக்காக வைத்திருந்த புத்தகங்களைக் கொடுத்தோம். புத்தகங்களைப் பார்த்தவுடன் “ புக்ஸ்-லாம் சூப்பரா இருக்கேப்பா” என்ற ஹெட்மிஸ்ட்ரஸ் அவர்கள் மற்றொரு ஆசிரியை அழைத்து நம்மைப் பற்றி கூறினார். அதைக் கேட்ட உடன் அந்த ஆசிரியை “யூத்ஸ்-லாம் இப்படியே கெளம்பிட்டா இந்தியாவையே மாத்திடலாமே!” என்றார்கள். நமக்கு உள்ளுக்குள் ஒரே மகிழ்ச்சி! பள்ளி தமிழ்த்தாய் வாழ்த்திற்காக கூடியது. தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும் தமக்குள் இருந்த ஆச்சர்யங்களில் ஒவ்வொன்றாக வெளிப்படுத்த தொடங்கியது பள்ளி.



ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சர்யம்!


முதல் ஆச்சர்யம்! (விருந்தோம்பல்)

நாம் முதலில் ஒரு செய்தியை கூறவில்லை. காலையில் H.M. அவர்களை சந்தித்தவுடன் அவர்கள் கேட்ட முதல் கேள்வி “சாப்ட்டயாப்பா?” நாம் “ இல்ல மேடம். புக்ஸ் குடுத்துட்டு பாத்துக்கலாம்” நம்முடைய பதிலை கேட்டவுடன் அலைபேசியை எடுத்து " டிஃபன் கொடுத்துவிடுங்க” என்றார்கள் H.M. அடுத்த 10 நிமிடத்தில் டிஃபன் பாக்ஸ் வந்தது.

இரண்டாவது ஆச்சர்யம்! (ஈகை)

ஆசிரியர் தின விழா கொண்டாடத்தின் ஒரு பகுதியாக மாணவியர் தத்தம் வீடுகளில் இருந்து கொண்டுவந்த அரிசியும், பருப்பும், வெல்லமும் மூட்டைகளில் இருந்தன. இவர்கள் பொங்கல் வைக்கப் போகிறார்களா? என்று எண்ணிக்கொண்டிருந்த நமக்கு, மைக்கில் வந்த அறிவிப்பு பதில் சொன்னது “கைப்பிடி அரிசி திட்டத்தின்கீழ் இந்த வருடம் சேர்ந்துள்ள அரிசி, பருப்பு, வெல்லம் அனைத்தும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு வழங்கப்படும்”! ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தின வழக்கமாக செய்து வருகிறார்கள் இந்த மாணவ தங்கங்கள்.

மூன்றாவது ஆச்சர்யம்! (சமூக சிந்தனை)

       அடுத்ததாக அன்று பிறந்தநாள் கொண்டாடும் மணவியரின் பெயர்கள் வாசிக்கப்பட்டன. அந்த குழந்தைகள் அனைவரும் தம் பள்ளிக்காக புத்தகங்களையும், மரக்கன்றுகளையும், பூச்செடிகளையும் வழங்கினர். அவர்களுக்கு மொத்த பள்ளியும் (1297 மாணவிகள்) ஒத்த குரலில் சத்தமாக “ஹேப்பி பர்த்டே டூ யூ” பாடி நம்மை நெகிழ வைத்தனர்.

நான்காவது ஆச்சர்யம்! (ஊக்குவித்தல்)

       புத்தகங்கள் வழங்கும்போது குழந்தைகளிடம் பேசுவதற்கு நாம் வாய்ப்பு கேட்டிருந்தோம். நாம் கேட்டது 132, 6-ம் வகுப்பு மாணவிகளிடம் பேசுவதற்கு. ஆனால்,  நமக்கு கொடுக்கப்பட்டது 1297 மாணவிகள் முன்னால் பேசுவதற்கான வாய்ப்பு. இதில் சிறப்பு என்னவென்றால் தலைமையாசிரியை அவர்கள் நமக்கு கொடுத்த அறிமுகம்தான் “ ‘ஒரு நூறு இளைஞர்களை என்னிடம் தாருங்கள். இந்தியாவையே மாற்றி காட்டுகிறேன்’ என்ற விவேகானந்தரின் வாக்கிற்கேற்ப இவர்கள் விதை என்னும் அமைப்பை ஏற்படுத்தி செயல்பட்டு வருகிறார்கள்”. இப்படிப்பட்ட அறிமுகம் கிடைத்தால் தூங்குபவன்கூட துள்ளி எழுவான் அல்லவா?



இவ்வளவு ஆச்சர்யங்களையும் நல்ல ஆசிரியைகளையும் சிறந்த தலைமையாசிரியையும் மற்றும் மிகச்சிறந்த மாணவிகளையும் தன்னுள் வைத்திருந்த அந்த பள்ளி சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூரில் இருக்கும் சிதம்பரம் செட்டியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகும்.

காலை வணக்கம் முடிந்தவுடன் 6-ம் வகுப்பு மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கினோம். மகிழ்ச்சியாக வழங்கப்பட்ட காலை உணவை முடித்துக் கொண்டு, இந்த அருமையான தொடக்கமே அரை வெற்றிக்கு சமமாகும் என்ற மகிழ்ச்சியுடனும், நம் முயற்சியில் நம்முடன் தன்னை இணைத்துக் கொண்ட பள்ளிக்கு நமது நன்றிகளுடனும், அடுத்த பள்ளியை நோக்கி நமது பயணத்தை தொடர்ந்தோம். நன்றிகளுடன்…!


மரு. ந.பிரகாஷ், 9677894977,போடிநாய்க்கன்பட்டி, நாமக்கல்.